Friday, July 29, 2011

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்

பர்வத மலை
பர்வத மலை
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.
கடப்பாரைப் படி

கடப்பாரைப் படி

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தண்டவாளப் படி

தண்டவாளப் படி

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

இறங்கும் பக்தர்

இறங்கும் பக்தர்

இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.

No comments:

Post a Comment